Saturday, July 2, 2011

இது ஒரு காதல் கடிதம்

அன்புள்ள என்னுயிர் தோழிக்கு, 

உனக்கு காதல் கடிதம் எழுதலாம் என்று எழுத ஆரம்பித்து விட்டேன்.. ஆனால், என்ன எழுதுவது என்று தெரியவில்லை. உன்னை காதலிக்க சொல்லி இந்த கடிதத்தை நான் எழுதவில்லை. என் இதயம் அமர்ந்த உனக்கு என் காதலை தெரியபடுத்தவே இதை எழுதுகிறேன்.  உன்னை எப்படி காதலிதேன் என்பதும் எனக்கு புரியவில்லை. நீ என்னை காதலிக்கிறாயா என தெரியவில்லை. நீ என்னோடு இல்லை என்றாலும் நீ என்னை காதலிக்கவில்லை என்றாலும் எனக்கு கவலை இல்லை. நீ சென்ற பாதையில் என்றாவது நடப்பேன் என்று நடையாய் நடக்கிறேன்.. நீ சுவாசித்த காற்றை நான் என்றாவது சுவாசிபேன் என்ற எண்ணத்தில் நான் இப்போதும் சுவாசித்து கொண்டிருக்கிறேன். 


நீ இட்ட கோலம் கண்டேன், ரசித்தேன்.  நீ சூடி அழகேற்றிய மலர் கண்டேன், மெய் சிலிர்த்தேன். உன் மூக்கில் அமர்ந்திருக்கும் மூக்குத்தி கண்டேன், உன் பெண்மையை ரசித்தேன். உன் காதுகளில் அலங்காரமாய் கம்மல் கண்டேன், ஏனோ அவைகளை பழித்தேன். ஏனோ, உன்னை மட்டும் இதுவரை முழுதும் காணாமல் இருந்து விட்டேன். உன்னை நித்தமும் காண முயல்கிறேன். நீ என்னுள்ளே இருந்தாலும் என்னருகே அமர்ந்தாலும் என்னோடு நடந்தாலும் எனக்கு தெரிவது உன் உள்ளத்தின் உருவம் மட்டுமே!

உன்னை ஒவ்வொரு நாளும் சுற்றி வந்ததாய் பெருமைபடும் சூரியனை போல நானும் ஒவ்வொரு நாளும் உன் வார்த்தைகள் என்னை சுற்றி வருவதை கண்டு நிதம் மகிழ்கிறேன். நீயோ என்னிடம் பிடித்தவைகளை பேசுகிறாய். ஆனால், எனக்கோ உன்னிடம் பேசிகொண்டிருப்பதே பிடித்து போய் விட்டது. அன்றொருநாள் கனவில் "பார்க்காமலே காதலிக்கிறப் பழக்கம் மீன்களுக்குண்டு" என்கிறேன். அதை கேட்டு அதிசயித்து கண்களை உருட்டினாய். "சந்திக்காத காதல் மீன்கள் இரண்டும் ஒன்றுபோல உருள்கின்றன" என்று நான் எனக்குள்ளேயே நினைத்து கொண்டேன். எத்தனை கவிதை எழுதியும் படித்தும் உன்னை வர்ணிப்பதில் திருப்தி அடையாதவனகவே இருக்கிறேன்.

எனக்கு காதல் கடிதம் எழுதி அனுபவமில்லை.. ஏதோ, என்னுள்ளான உன் நினைவுகளை இங்கே எழுதி இருக்கிறேன். பிடிக்கவில்லை எனில் கசக்கி எரிந்துவிடாதே!! இதயத்தை தான் வைத்து கொண்டாய், இதையாவது என்னிடம் திருப்பி கொடுத்துவிடு! என்னிடம் இருக்கும் உன் நினைவுகளில் ஒன்றாக இதையும் பத்திர படுத்திகொள்கிறேன்.
இப்படிக்கு,
அன்புள்ள தோழன்..

இத படிச்சி புட்டு யாரும் எனக்கு எழுதிகொடுங்க எனக்கு எழுதிகொடுங்கன்னு  தொல்லை பண்ண கூடாது.. நான் ரொம்ப பிஸி...

1 comment:

Post a Comment